Friday 11 January 2019

திருவெண்காடு கோவில்

திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்

1. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

2. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

4. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

5. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.

6. திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.

7. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

8. திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

9. திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.

10. அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

11. இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

12. திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.

13. திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்

14. இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

15. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.

16. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

17. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.

18. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

19. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.

20. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கும்

தனிஷ்டா பஞ்சமி ஒரு பார்வை

தனிஷ்டா பஞ்சமி

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. .
சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள்.தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது.
சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில்
இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள்.
கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேத ஆகம பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும.